தடையறத் தாக்க

width="200"

செல்வா என்ற கேரக்டரில் வரும் அருண் விஜய் தனது பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கால்டாக்சி ஓட்டும் அருண் விஜய், பிரியாவாக வரும் மம்தா மோகன்தாஸை காதலித்துக் கொண்டிருக்கிறார்.

வாங்கிய கடனை அடைக்கவில்லை என்பதற்காக அவரது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போகிறார். அது மோதலாக உருவெடுக்க, போலீஸின் ஆதரவுடன் ரவுடியிசம் செய்யும் மகா என்னும் அந்த கும்பலின் தலைவன் கொல்லப்படுகிறான்.

அந்த கொலைப்பழி அருண் மீது விழுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக மகாவின் கும்பல் அருண் விஜயை துரத்துகிறது. இந்த கும்பலிடமிருந்து அருண் தப்பித்தாரா இல்லையா, காதலியை கை பிடித்தாரா? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் மகிழ் திருமேனி.
 
110 இடங்களில் கத்தரி போட வேண்டும், இல்லையெனில் 'ஏ' சர்டிபிகேட்தான் தரமுடியும் என்று சென்சார் போர்டு சொல்ல, எனக்கு 'ஏ' சர்டிபிகேட்தான் வேண்டும் என்று டைரக்டர் இப்படத்திற்கு வாங்கியது சரியாகத்தான் இருக்கிறது. படம் முழுக்க வன்முறையும், ஆபாச பேச்சுக்களும் விரவிக் கிடக்கின்றன. ரவுடியிச வாழ்க்கை என்பது இவைகளை சுற்றித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
 
அருண் விஜய் இப்படத்தில் அழகாய் இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். சண்டை காட்சிகளில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார். மம்தாவுடன் காதல் செய்யும் காட்சிகளில் நன்றாக ஒன்றியிருக்கிறார்.
 
மம்தா மோகன்தாஸ் அழகாய் வருகிறார். அருணைக் காதலிக்கிறார். வெட்கப்படவும் செய்கிறார். இவரது காதல் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளுமை. இவருக்காக ஏழுநாட்களும் அணிந்து கொள்ள ஏழு விதமான உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு வெட்கப்படும் காட்சி மனதை நெருடினாலும் இளைஞர்களை இக்காட்சி கவரும்.
 
படத்தில் வில்லன்களாய் வலம் வரும் மகா, குமார் ஆகியோரின் கொடூரமான குணங்கள், அடக்குமுறைகள், குரூரங்கள் அனைத்தும் அந்த கேரக்டர்களுக்கு வலு சேர்க்கின்றன. இவர்களது வில்லத்தனமான நடிப்பு நம்மை சில இடங்களில் உறைய வைக்கிறது.
 
இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே. எஸ். தமனின் இசையில் குத்தாட்டப் பாடலான 'பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான்..' கலகலக்கிறது. காட்சிப்படுத்தியதில் ஆபாசம் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் மிரட்டியிருக்கிறார்.
 
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. பிரவீன் - ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு திரில்லர் கதைக்கேற்ற வேகத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான ரவுடியிசக் கதைதான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை பரபரவென நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.
 
காமெடிக்கென்று யாரையும் தேடாமல் கதைக்குள்ளேயே இயல்பான நகைச்சுவை காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. அந்த ஊரில் ஒரு போலிஸ் கூட நல்லவராக இருக்க மாட்டாரா? எல்லோரும் வில்லனுக்கு அடியாட்களா? என ஒரு சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார் மகிழ் திருமேனி.
 
தடையறத் தாக்க - ஆக்ஷன் ரசிகர்களை நிச்சயம் தாக்கும்




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India