கொடைக்கானலில் செருப்பு தைக்கும் தொழில் செய்து பிழைக்கும் இளைஞன் வினோ. அதே பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி கோடீஸ்வரர் மகள் திவ்யா கல்லூரியில் படிக்கிறார். வினோ நல்ல நடத்தைகள் திவ்யாயை ஈர்க்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர். இவர்கள் காதலை திவ்யா தந்தை எதிர்க்கிறார். அடியாட்களை ஏவி வினோவை தீர்த்து கட்டவும் ஏற்பாடு செய்கிறார்.
காதல் ஜோடி வெளியூருக்கு தப்பி ஓடுகிறது. அவர்களை வில்லன் கூட்டம் விடாமல் துரத்துகிறது. இருவரும் தப்பினார்களா என்பது கிளைமாக்ஸ்.... ஏழை பணக்கார காதலை விறுவிறுப்பும் உயிர்ப்புமாக நகர்த்துகிறார் இயக்குனர் வியாசன். இளம் ஜோடிகளாக வினோ, திவ்யா பளிச்சிடுகின்றனர். மழையில் செருப்பு தைக்கும் கடைக்குள் ஒதுங்கும் திவ்யாவுக்கு கொலுசனிந்த காலை பார்த்த படியே மழை கோட்டை வினோ வழங்குவது கவித்துவம்.
குடிகார தந்தையை அடிக்கும் ரவுடிகளை ஆவேசமாக தாக்கி துவம்சம் செய்வது.. வீட்டில் அவருக்கு பணி விடைகள் செய்வது என பாசக்கார மகனை கண் முன் நிறுத்துகிறார். காதலியை சைக்கிளிலேயே அவருக்கு பிடித்த தாஜ்மகாலை பார்க்க ஆக்ரா அழைத்து போவது அழுத்தம். திவ்யா கொடைக்கானல் பனியில் நனைந்த மலராய் அழகு காட்டுகிறார்.
குடிகாரராக வரும் மன்சூர் அலிகான் தத்துவம் பேசி கவர்கிறார். குடியின் தீமை பற்றி அவர் பேசும் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. தீப்பெட்டி கணேசன் சிரிக்க வைக்கிறார். செருப்பு தைக்கும் தொழிலாளி மேல் பணக்கார பெண் திடும் என காதல் வயப்படுவது ஒட்டவில்லை. காதலில் இன்னும் ஜீவன் ஏற்றி இருக்கலாம். ரவி சீனிவாசன் கேமரா கொடைக்கானல் அழகை அள்ளுகிறது.
எஸ்.எஸ். குமரன் பின்னணி இசை பலம்.


Paris Time

