மாசி

width="200"

நேர்மையான போலீஸ் அதிகாரியின் குடும்பத்திற்குள் நுழையும் ரவுடி கும்பலை பழி தீர்க்கும் போலீஸ்காரரின் கதை.

சென்னை காசிமேட்டில் ரவுடியாக வலம் வருபவர் பொன்னம்பலம். இவருக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்பவர் ஹோம் மினிஸ்டராக வரும் கோட்டா சீனிவாசராவ். இவர்கள் இருவரும் ஒரு ரவுடி கும்பல்.  

மும்பையில் இருந்து கொண்டு சென்னையில் உள்ள ரவுடிகளை இயக்கும் நாகாவாக வருபவர் பிரதீப் ராவத். இவரின் கையாளாக இருந்துகொண்டு சென்னையில் ரவுடி கும்பலை நடத்தி வருபவர் 'தூள்' வில்லி சகுந்தலா. இது மற்றொரு ரவுடி கும்பல்.  

நேர்மையான போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், அவருக்கு அழகான மனைவி. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில், ஒருநாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும் போது நாகா, பொன்னம்பலம் ரவுடி கும்பல்களுக்கிடையே நடைபெறும் சண்டையில் அர்ஜுன் மனைவி பரிதாபமாக சுட்டுக் கொல்லப்படுகிறார்.  

இதனால் கோபம் கொண்ட அர்ஜுன், மனைவியின் சாவுக்குக் காரணமாக இரண்டு ரவுடி கும்பல்களையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். இதனையடுத்து ஆக்சனில் களமிறங்குகிறார். ரவுடி கும்பலின் ஒவ்வொருவரையும் என்கவுன்டர் என்ற முறையில் சராமாரியாக சுட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையில் மற்றொரு நடிகையின் என்ட்ரி. அவருடன் டூயட்டும் பாடுகிறார்.  

அர்ஜுன் ரவுடிகளை என்கவுன்டர் செய்வதால், அவர் எல்லை மீறி போகிறார் என்று போலீஸ் அதிகாரிகள் சதி செய்து அவரை சிறையில் அடைக்கின்றனர்.  

இவ்வளவு நாட்கள் குற்றவாளியாக தான் அடைத்த சிறைக்குள் நானுமா? என அர்ஜுன் மனம் குமுறினாலும், அதை வெளிகாட்டாமல் இருப்பது போலீஸ் பதவிக்கே உள்ள கெத்தைக் காட்டுகிறது.  

ரவுடியான நாகா அவரை வெளிக்கொண்டு வர உதவுகிறார். இவ்வளவு நாட்கள் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றியதற்கு தனக்கு கிடைத்த பரிசு ஜெயில் என்ற விரக்தியில், தனக்கு உதவி செய்த நாகா கும்பலுடன் கைகோர்க்கிறார் அர்ஜுன்.

நாகா கும்பலிடம் சேர்ந்து கொண்ட அர்ஜூன், தனக்கும், நாகா கும்பலுக்கும் எதிரியான பொன்னம்பலம் மற்றும் ஹோம் மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ் ஆகியோரை, நாகா தம்பியின் உதவியுடன் துவம்சம் செய்கிறார்.  

இறுதியில் அர்ஜூன் நாகா கும்பலை அழித்து போலீஸ் புத்தியை காட்டினாரா? இல்லை நாகா கும்பலிடமே விசுவாசமாக இருந்தாரா? என்பது கிளைமாக்ஸ்.  

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக வெளிவந்துள்ளது. திரையினுள் நுழைந்தது முதல் வெளிவரும் வரை துப்பாக்கி சுடும் சத்தம் நம் காதைப் பிளக்கிறது. கொஞ்சம் காமெடி + காதல் இருந்திருக்கலாம்.  

அர்ஜுனுக்கே ஏற்ற போலீஸ் கதாபாத்திரம். ரவுடிகளாக வரும் நாகா, பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் முத்திரை பதித்திருக்கின்றனர். பொம்பள ரவுடியாக வரும் சகுந்தலா உண்மையான ரவுடியாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மிளிர்கிறார்.  

இயக்குனருக்கும் துப்பாக்கிக்கும் ஏதோ முன்ஜென்மத்தில் இருந்தே தொடர்போ என்று தெரியவில்லை. படம் முழுக்க துப்பாக்கி கையுமா எல்லோரும் வருகிற மாதிரியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கிச்சா.  
படத்தின் பாடல்களை இயக்குனர் கிச்சாவும், யுகபாரதியும் இணைந்து எழுதியிருக்கின்றனர். இசையமைப்பாளர் தீனா, வரிகளுக்கு ஏற்ற மெட்டை கொடுத்து பாடல்களுக்கு புத்துயிர் அளித்திருக்கிறார்.  

படம் முழுக்க டமார் டுமீல் என வெடிக்கும் அர்ஜுன், தியேட்டர்களிலும் வெடித்து ரசிகர்களின் மனதை கவருவாரா(?) என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India