மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற வலிமையான விஷயத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலு மலர்வண்ணன்.
அம்மாவுக்கு அடக்கமான, தங்கை மீது உயிரை வைத்திருக்கிற ஹீரோ திலிப்குமார். அவரையே உருகி உருகி காதலிக்கிற முறைப்பெண் கதாநாயகி ஜானவி. தங்கை கல்யாணத்துக்கு பணம் சேர்க்க சிங்கப்பூர் செல்கிறார் ஹீரோ.
வீட்டில் தனியாக இருக்கும் ஹீரோவுடைய தங்கையை கதாநாயகியின் தந்தை கற்பழிக்க முயற்சிக்க, அவரிடமிருந்து போராடி மீண்டு வருகிறார். இருந்தாலும் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்படைந்து நோய் வாய்பட்டு ஹீரோவின் தங்கை இறந்து போகிறார்.
ஹீரோவின் அம்மாவுக்கு இந்த உண்மை தெரிந்து ஹீரோ-ஹீரோயின் காதலுக்கு குறுக்கே நிற்கிறார். இருவரும் காதலில் சேர்ந்தார்களா? குற்றம் செய்த கதாநாயகியின் அப்பா தண்டிக்கப்பட்டாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
ஹீரோவாக வரும் திலிப்குமார் தங்கை மேல் வைக்கும் பாசத்தில் மட்டும் யதார்த்தம். மற்ற நேரங்களில் அவருக்கென்று குறிப்பிடும் அம்சம் எதுவும் இல்லை. ஹீரோயினாக ஜானவி. கண்கள் மட்டும் அழகாக இருக்கிறது. ஹீரோவையே நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
ஹீரோவின் தங்கை சுந்தரியாக வரும் கிரண் மை மட்டும் மனதில் நிற்கிறார். தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மனதிற்குள்ளே வைத்து பயப்படுவதிலும், சாகும் நேரத்தில் தன் நகையை போட்டு பார்க்க நினைப்பதிலும் பரிதாபப்பட வைக்கிறார்.
வில்லனாக வரும் திரவிய பாண்டியன் பெரிய மனிதர் மாதிரியான தோற்றத்திலும், மனதில் வக்கிரமான எண்ணங்களை வைத்துக்கொண்டு உதட்டால் சிரிப்பையும், அமைதியான, யதார்த்தமான சில நேரங்களில் யதார்த்தத்தையும் மீறுகின்ற பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.
வடிவுக்கரசி ஹீரோவுடைய அம்மா. நிறைய படங்களில் பார்த்த வழக்கமான அம்மா பாத்திரம்தான். புதிதாக ஒன்றும் இல்லை. சாமியாடியாக வரும் எம்.எஸ். பாஸ்கரின் வழக்கமான பேச்சு மிஸ்ஸிங். தஞ்சை வட்டாரக் கதைதான் என்றாலும் அந்த வட்டாரத் தமிழின் அழகை படத்தில் தவற விட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் உறவு முறைகளில் அந்த வட்டாரத்திற்குரிய யதார்த்தத்தை கடைப்பிடித்திருக்கிறார்.
படத்தில் பழிக்குப்பழி என்று வரிந்து கட்டிக் கொண்டு வன்முறையில் இறங்காமல் மன்னிப்பின் மகத்துவத்தை இயக்குனர் எடுத்துக் கூறியதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
காமம் யாரையும் விட்டுவைப்பதில்லை என்றாலும், அன்பும், பொறுப்பும் இருக்கின்ற கதாநாயகியோட அப்பா, தன் மகள் வீட்டில் இருக்கும் போது, தனது மகள் வயது பெண்ணை கையை பிடித்து இழுப்பாரா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
ஸ்ரீரஞ்சன் ராவ்-ன் ஒளிப்பதிவு சில காட்சிகளில் கவர்கிறது. 'கண்ணோடு வந்தாள்' பாடலை கண்ணுக்கு குளிர்ச்சியாக எடுத்திருக்கிறார். படத்தில் அரிவாளோடு காவல் காக்கும் சங்கிலி வீரன் சாமியைவிட நம்மை படத்தில் அதிகம் பயமுறுத்துவது இசை அமைப்பாளர் தஷியின் பின்னணி இசைதான். ஏதாவது ஒரு கதாபாத்திரம் அதிர்ச்சியாக போகிறார்கள் என்றால் அதற்கென்று ஒரு சவுண்ட் வைத்திருக்கிறார். அதை சற்று கவனித்திருக்கலாம்.
படத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான முற்போக்கான சிந்தனைகள் நிறைய இருந்தாலும், அதற்கு முரண்பட்ட காட்சிகளும் படத்தில் இருப்பது படத்தின் வேகத்தை சற்றே தடை செய்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை படத்தில் கூறியதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் ஒத்தவீடு ரசிகர்கள் மனதில் வாழும் வீடு.