கண்டதும் காணாததும்

width="200"

இச்சை யாருடைய வாழ்க்கையையும் தனதாக்கி வீழ்த்திவிடும் என்பதை சொல்ல வந்த படம்.
 
ஹீரோயின் சுவாஷிகா திருச்சியில் இருந்து சென்னைக்கு படிக்க வருகிறார். ஹீரோ படிக்கும் அதே கல்லூரியில் ஹீரோயினும் சேருகிறார். முதல் சந்திப்பிலேயே ஹீரோயினுக்கு தொல்லை தருபவனை அடித்து அவர் மனதில் இடம் பிடிக்கிறார் ஹீரோ.
 
ஹீரோவின் அக்கா அமெரிக்காவில் செட்டிலாகிவிட அவரை பார்க்க ஹீரோவின் அப்பாவும், அம்மாவும் போகிறார்கள். தனிமையில் இருக்கும் ஹீரோவிடம் காதலை சொல்ல வீடு தேடி வருகிறார் ஹீரோயின். மஞ்சள் புத்தகத்தை படித்து விட்டு தடுமாற்றத்தில் இருக்கும் ஹீரோ, ஹீரோயினை தனிமையில் பார்த்ததும் அவரை கற்பழிக்க முயற்சி செய்கிறார்.
 
இதனால் மனதளவில் உடைந்து போகும் ஹீரோயின், முடிவு வரை ஹீரோவை வெறுத்து ஒதுக்கி மன்னிக்க மறுத்து விடுகிறார். இதனால் ஹீரோ என்ன முடிவு எடுக்கிறார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
 
ஹீரோ முகிலாக விகாஷ். படத்தின் பின்பாதியில் ஹீரோயிசம் காட்டாமல் நடிக்க நினைத்ததற்காக மட்டும் பாராட்டுக்கள். மற்றபடி கவனம் பெறவில்லை.
 
ஹீரோயின் கவிதாவாக வரும் சுவாஷிகா தன்னிடம் தவறாக நடக்க இருக்கும் ஹீரோவிடம் இருந்து தப்பிக்கும் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். மற்றபடி நடுத்தர வர்க்கப் பெண்ணாக நம் மனதில் பொருந்துகிறார்.
 
ஹீரோவின் நண்பர்களாக வரும் பரோட்டா சூரியும், பஞ்ச் பாண்ஸும் ஒயின்ஷாப் காமெடி காட்சிகளிலும், சுந்தர்ராஜனை வைத்து செய்யும் காமெடிகளில் மட்டும் சிரிப்பு. குறிப்பாக, பஞ்ச் பாண்ஸ் குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு விளக்கம் சொல்ல, எழுத்தாளராக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் இந்த பாய்ண்ட் நமக்கு மட்டும் என் வரமாட்டுக்கு என்று புலம்புவது கலக்கல்.
 
வி.ஏ.சார்லி இசையில் அஸ்கு புஸ்கு பாடலும், கண்ணே என் கண்ணே பாடலும் கேட்கும் ரகம். அஸ்கு புஸ்கு பாடல் படமாக்கப்பட்ட விதம் குளுமை.
 
படத்தின் பலவீனம் ஒளிப்பதிவும், அழுத்தமே இல்லாமல் ஒரு குறும்படத்தை இழுத்ததைப் போல் தொய்வைத் தரும் காட்சிகளும்தான். பகல் காட்சிகளே சில நேரங்களில் இருட்டாகி ஹீரோ, ஹீரோயின் முகத்தை தேட வேண்டியிருக்கிறது.
 
முன்பாதியில் காதலை சொல்லியிருக்கும் இயக்குனர் பின்பாதி முழுவதும் ஹீரோயின் ஹீரோவை மன்னிக்க விரும்பாததை இழுத்திருக்க வேணுமா? காதலை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாமே?
 
பாரதிதாசன் கவிதையோடு அறிமுகம் ஆகும் ஹீரோ, விவரம் தெரிந்தவராக காட்டிவிட்டு, ஒரு மஞ்சள் புத்தகத்தை படித்து விட்டு ஹீரோயினை கற்பழிக்க முயற்சிப்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாதது.
 
மார்க்சிம் கார்க்கி வரை பேசுகிற புத்திசாலி ஹீரோயின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அவசர கதியில் முடிவெடுப்பது அந்த கதாபாத்திரத்தையே காலி செய்கிறது.
 
ஹீரோவின் தவறுக்கு ஹீரோயினின் அப்பாவும், சித்தப்பாவும் ஹீரோவை வரவழைத்து பேசுகிற விதம், பஞ்ச் பாண்ஸ் நண்பனாகும் முறை என ஒரு சில இடங்களில் கவர்ந்திருக்கிறார் இயக்குனர்.
 
நல்ல விஷயத்தை சொல்ல வந்த இயக்குனர் அதை ஒரு அழுத்தமான கதையோடு சொல்ல வந்திருந்தால் எல்லோரும் இப்படத்தை கண்டிருப்பார்கள்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India