சென்னையில் இருந்து இரண்டு வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார் நாயகன் கண்ணன். இவரைக் கண்டு சிலர் விழுந்தடித்து ஓடுகிறார்கள். அப்போது கண்ணன் "இவர்கள் என் நண்பர்கள். ஏன் விழுந்து அடித்து ஓடுகிறார்கள்" என்று பிளாஷ்பேக் சொல்கிறார்.
கண்ணன், தனது வீட்டிற்கு எதிரில் இருக்கும் ரேவதியை ஒருதலை பட்சமாக காதலிக்கிறார். ரேவதியின் தந்தை காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருடன் கண்ணனும் இணைந்து வேலை பார்க்கிறார்.
தந்தையின் கணக்கு வழக்குகளை ரேவதி பார்த்துக்கொள்கிறாள். இதனால் இருவரும் தினமும் சந்திக்கவும், பேசவும் நேரிடுகிறது. இதனை கண்ணன் தன் நண்பர்களிடம், 'நானும் ரேவதியும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். நான் இல்லாமல் ரேவதியால் ஒரு நொடி கூட இருக்க முடியாது' என்று பொய் சொல்லி நண்பர்களை ஏமாற்றி வருகிறார்.
ஒரு கட்டத்தில் ரேவதியின் தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நாளையும் குறித்து விடுகிறார். இதை அறிந்த கண்ணன், ரேவதியிடம் சென்று 'நான் உன்னை காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். இருந்தும் ஏன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாய்' எனக் கேட்க, ரேவதியோ 'நான் உன்னை காதலிக்கவில்லை. சிறு வயதில் இருந்து பழக்கம் என்பதால் நட்புடன் பழகினேன்' என்று சொல்கிறார்.
இதனால் மனமுடைந்து போகும் கண்ணன் ரேவதியின் திருமணத்திற்கு முந்தைய நாள் குடித்து விட்டு நினைவில்லாமல் மயங்கி கிடக்கிறார். இதனைக் கண்ட நண்பர்கள் ரேவதியுடன் கண்ணனை சேர்த்து வைக்க வேண்டும் என்று திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு ரேவதியை மயக்க மருந்து கொடுத்து கடத்துகிறார்கள்.
நாயகன், நாயகி மயக்கத்தில் இருப்பதால் காலையில்தான் விழிக்கிறார்கள். விழுத்தவுடன் நாயகி 'ஏன் என்னை கடத்தி வந்தீர்கள்' என சத்தம் போடுகிறார். அப்போதுதான் ரேவதி கண்ணனை காதலிக்கவில்லை என்று அவரது நண்பர்களுக்கு தெரியவருகிறது.
ஏற்கனவே ரேவதியின் சகோதரர்கள் வெட்டு, குத்து என்று அலைபவர்கள் நம்மை உயிரோடு விடமாட்டார்கள் என்று அஞ்சி, அவரது நண்பர்கள் அனைவரும் கண்ணன் மற்றும் ரேவதியோடு கேரளாவிற்கு சென்று விடுகிறார்கள். அங்கே தனக்குள் இருக்கும் காதலை கண்ணனிடம் ஒப்புக் கொள்கிறார் ரேவதி.
ரேவதியின் அண்ணன் கேரளா சென்று ரேவதியை தன்னோடு வருமாறு அழைக்கிறார். அவர் வரமறுக்கவே, கண்ணனை சொந்த ஊருக்கு இழுத்து வருகிறான்.
கண்ணனை மீட்க ஊருக்கு வரும் நண்பர்கள் தாக்கப்படுகிறார்கள். கண்ணனையும் அவர்கள் தாக்கி அவமானப்படுத்துகிறார்கள். இதனால் கண்ணன் குடும்பம் சென்னைக்கு வருகிறது.
சென்னை சென்று திரும்பும் கண்ணன் ரேவதியை கைப்பிடித்தானா? என்பது மீதிக்கதை.
கண்ணன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளிலும், தனது நண்பர்களிடம் ரேவதி என்னை காதலிக்கிறார் என்று பொய் சொல்லும் காட்சிகளிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரேவதியாக நடித்துள்ள ஆத்மியா அழகான நடிப்பில் இயல்பான பெண்ணாகத் தெரிகிறார். திரையில் காண்பதற்கு அழகாக தெரிகிறார்.
கண்ணனின் நண்பர்களாக நடித்துள்ள பரோட்டா சூரி, ஆடுகளம் நரைன், சிங்கம்புலி, மூர்த்தி, ஸ்ரீநாத் ஆகியோர் நாயகனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்திற்கு கலகலப்பை கூட்டுகிறது. குறிப்பாக நாயகியை கடத்தி விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் சிரிப்பலையில் அதிர்கிறது.
ரேவதியின் அண்ணனாக நடித்திருக்கும் ரவிமரியா வில்லத்தனத்தில் மட்டுமின்றி நகைச்சுவையிலும் கலக்கியுள்ளார்.
இமானின் இசையில் பாடல்கள் சிறப்பு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள எழில், படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவையுடனும், விறுவிறுப்புடனும் நகர்த்தியுள்ளார்.
மனம் கொத்தி பறவை மொத்தத்தில் ரசிகர்களின் மனங்களை கவரும் பறவை.


Paris Time

