பொற்கொடி பத்தாம் வகுப்பு

width="200"

குடியால் ஒரு கிராமம் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறது என்பதை காதல் கதையோடு சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த 'பொற்கொடி பத்தாம் வகுப்பு'.
 
கிராமத்தின் பண்ணையாராக வரும் பாலாசிங், சாராயம் காய்ச்சி விற்று வருகிறார். அவரது மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் கதாநாயகன் சிவா. பண்ணையாரின் முதல் மனைவி இறந்துவிட, அவர் இரண்டாவதாய் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
 
சித்தி கொடுமையால் பாதிக்கப்படும் சிவா மனத்தாங்கலோடு பள்ளிக்கு செல்கிறார். அங்கே கதாநாயகியான பொற்கொடியை சந்திக்கிறார். கண்டதும் அவருக்கு காதல் பிறக்கிறது.
 
நாயகனுக்கு சித்திக் கொடுமை எனில், நாயகிக்கோ குடிகார தந்தையின் கொடுமை. அவரது தாய் பாக்கியம் வீட்டிலேயே ஊதுவத்தி தயாரித்து, விற்று குடும்பத்தை நடத்துகிறார்.
 
நாயகியின் தந்தையோ குடிபோதையில் கதாநாயகியை அடித்து உதைப்பதும், குடிகார மச்சினனான அங்கமுத்துவை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் வருகிறார்.
 
பண்ணையாரின் சாராய விற்பனையால் அந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமையாகிறார்கள். இதனை தனது வகுப்பாசிரியரின் ஆலோசனையின் பேரில் கதாநாயகன் தடுக்க நினைக்கிறான்.
 
இதுகுறித்து போலீஸிடம் தகவலைச் சொல்ல, அவர்கள் வந்து பண்ணையாரை அள்ளிச் செல்கின்றனர். இதற்கு நாயகியின் தாய் பாக்கியமும் உடந்தையாக இருக்கிறார்.
 
சிறையிலிருந்து மீண்டு வரும் பண்ணையார், பாக்கியத்தை படுக்கையில் வீழ்த்த நினைக்கிறார். அவரது பார்வை கதாநாயகியின் மீதும் விழுகிறது. இவருக்கு உதவியாக அங்கமுத்துவும் இருக்கிறான்.
 
இதை அறிந்து கொள்ளும் கதாநாயகன் தனது தந்தையிடமிருந்து அவர்களை மீட்டானா? அவனது காதல் என்ன ஆனது? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் பழ.சுரேஷ்.
 
சிவா வேடத்தில் வரும் பிரவீணுக்கு படத்தில் அமைதியான நாயகன் வேடம். அழுத்தமாய் செய்திருக்கிறார். பொற்கொடியாக வரும் பிருந்தா கண்ணுக்கு அழகாய் இருக்கிறார். 'கருப்புக்கறை சேலைகட்டி' பாடலில் கவர்ச்சியும் காட்டுகிறார்.
 
பாக்கியமாக வரும் 'கருத்தம்மா' ராஜஸ்ரீ, தனது பாத்திரத்தை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். வில்லனாக வரும் பாலாசிங் நடிப்பில் வில்லத்தனம் பளிச்சிடுகிறது. 'பொறந்தது முதல் என்னை அப்பான்னு கூப்பிடாத நீ... ஒரு பொட்டச்சிக்காக என்னை அப்பாங்கறியா' என கோபப்படும்போது, ஆக்ரோஷ நடிப்பு வெளிப்படுகிறது.
 
அங்கமுத்துவாக வரும் சல்கான் வில்லத்தனத்தோடு காமெடி செய்யவும் முயற்சித்திருக்கிறார். ஓவியன் இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமின்றி பாடல்களும் எழுதியிருக்கிறார். இவரது எழுத்து மற்றும் இசையில் 'குடிச்சிட்டோம்' பாடல் தாளம்போட வைக்கிறது.
 
திரைக்கதையில் தொய்வு இருக்கிறது. சொல்ல வந்த செய்தியை நறுக்கென்று சொல்லாமல் நீட்டித்திருப்பது படத்திற்கு பலவீனம்.
 
'பொற்கொடி பத்தாம் வகுப்பு' இன்னும் நன்றாக படித்துவிட்டு வந்திருக்கலாம்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India