தாய், தந்தையை இழந்து பொறுப்பில்லாமல் அரசியல் மேடைப் பேச்சாளராக நாயகன் சுப்பு. பொதுக்கூட்டம் இல்லாதபோது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கையில் கிடைப்பதைத் திருடி தன் பணப்பிரச்சினையைப் போக்கிக் கொள்கிறார். அந்த பகுதி மக்கள் அனைவரும் இவர்தான் திருடன் என்று தெரிந்தும், இவரை எதுவும் செய்ய முடியவில்லை.
அரசியல் செல்வாக்கு உள்ளதால் இவர் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இவர் கண்டு பயப்படுபவர் ஒருவர்தான். அவர் நாயகி பானு.
நாயகனும் நாயகியும் சிறு வயதில் நண்பர்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை வருகிறது. இதனால் நாயகி பானு நாயகனை முற்றிலும் வெறுக்கிறாள்.
தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகிற நாயகி, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மட்டும் சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஒருநாள் நாயகி, சாலையில் ஒரு மனநோயாளியை நாய்கள் கடித்துக் குதறுவதைப் பார்க்கிறாள். இதனைக் கண்ட நாயகி மனநிலை பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். அவர் உடம்பில் உள்ள துர்நாற்றத்தை சுத்தம் செய்து கொண்டு வந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர். இதனால் நாயகியின் தோழி வேறு வழியில்லை இவரை சுத்தம் செய்ய ஒருவரால்தான் முடியும். சுப்பு நீ என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வான் என்று தோழி சொல்ல, சுப்புவை அழைத்து சுத்தம் செய்யச் சொல்கிறாள்.
பானுவின் பேச்சை தட்டாமல் செய்யும் சுப்புவின் மீது நாயகிக்கு இரக்கம் வருகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மனநோயாளியை கூடவே வைத்து பார்க்கவேண்டிய சூழ்நிலை வந்ததால், நாயகியின் வேண்டுகோளை ஏற்று நாயகன் மன நோயாளியை கூடவே வைத்துக் கொள்கிறான். இதனால் நாயகிக்கு நாயகன் மீது காதல் மலர்கிறது.
நாயகனை கைபிடிக்க நினைக்கும் நாயகி சுப்புவை அழைத்து, நீ என்ன தொழில் செய்கிறாய்? உனது லட்சியம் என்ன? என கேட்க, நாயகன் தனது நிலையை சொல்கிறான்.
நீ என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் நீ இருக்கும் அரசியலிலோ, அல்லது வேறு ஏதாவது ஒரு தொழிலிலோ நல்ல நிலையில் வரவேண்டும் என்று நாயகி கட்டளையிட, நாயகன் தான் இருக்கும் கட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில் களமிறங்குகிறான்.
உடனே, மேயர் ராஜேந்திரனிடம் சென்று, 'தலைவா! நான் வரும் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராக போட்டியிட விரும்புகிறேன்' என்று சொல்ல, அவரும் 'இம்முறை முடியாது. அடுத்தமுறை உனக்கு சீட் தருகிறேன்' என்று கூற, 'பரவாயில்லை தலைவா! நான் தனித்து போட்டியிடுகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.
சுயேட்சையாக போட்டியிடும் நாயகனுக்கு முதலில் ஆதரவு கிடைக்கவில்லை. பிறகு வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து கூட்டத்தை மிரட்டி சேர்க்கிறார். நான் வெற்றி பெற்றால் இனி திருடுவதை முற்றிலுமாக விட்டுவிடுகிறேன். உங்களுக்கு நல்லது செய்கிறேனோ இல்லையோ, நான் இனி ஒருபோதும் திருட மாட்டேன் என உறுதிமொழி கூறுகிறார். இதனால் மக்கள் அவரை வெற்றிபெறச் செய்கின்றனர்.
மேயர் தேர்தலில் 20 சீட்டுகளுக்கு மேல் பெறும் கட்சி மேயர் பதவியைக் கைப்பற்றும். ஆனால் 40 இடங்களில் 20 இடங்களை ஆளும் கட்சியும், 20 இடங்களை எதிர்கட்சியும் பெறுகிறது.
இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நாயகன், கட்சி தலைமையிடம் மேயர் ராஜேந்திரனை அழைத்துச் சென்று, தனக்கு மேயர் பதவி கொடுக்கும் பட்சத்தில் தங்களது கட்சிக்கு எனது ஆதரவு உண்டு என்று நாயகன் கூறுகிறான். அதை ஏற்ற கட்சி தலைமையிடம் நாயகன் 2 1/2 வருடம் மட்டும் மேயராக பணியாற்ற விருப்பம் தெரிவிக்கிறது.
இதனால் கோபம் கொண்ட ராஜேந்திரன், சுப்புவைக் கொல்ல சதி செய்கிறான். இதிலிருந்து சுப்பு தப்பித்தாரா? தன் மேயர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டாரா? என்பது மீதிக்கதை.
சுப்புவாக நடித்துள்ள நாயகன் விஷ்ணுப்ரியன் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் சிறப்பான, முதிர்ச்சியான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். நடன அசைவுகளில் தன் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
பானுவாக நடித்துள்ள நாயகி ஸ்வேதாபாசு, படத்தில் சமூக கருத்துக்களை பதிவு செய்யும் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், குடும்ப பெண்ணாக வரும் காட்சிகளிலும் தனது நடிப்பை சிறப்பாக செய்துள்ளார்.
நாயகியின் அப்பாவாக வரும் 'நாடோடி' முத்துக்கிருஷ்ணன் தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
'தமிழ் படம்' படத்திற்கு இசையமைத்த கண்ணன் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையில் 5 பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. அசோக்குமாரின் வசனத்தில் அழுத்தம் உள்ளது. குறிப்பாக, நாயகியின் தந்தை நாயகனைப் பற்றி எடுத்துக்கூறும் வசனங்கள் எதார்த்தமானவை.
ஆனந்த் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. பாடல்களில் இவரது ஒளிப்பதிவு முற்றிலும் தேர்ந்தவராக இவரை எடுத்துக்காட்டியுள்ளது. அனைத்து பாடல்களையும் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.
படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என்று ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சே.ரா.கோபாலன். திரைக்கதையில் வித்தியாசத்தையும், விறுவிறுப்பையும் காட்டியிருப்பது இவரது பலமே.
மொத்தத்தில் 'மை' கண்ணுக்கு அழகுதான்.