அரசியல் சதியில் சிக்கி வாழ்வை தொலைக்கும் இளைஞன் கதை.
போதை, நட்பு வட்டாரம் என தான்தோன்றித்தனமாக திரிபவன் பச்சை. உள்ளூர் அரசியல்வாதியிடம் சேர்ந்து கட்சி வேலை செய்கிறான். ஒரு கட்டத்தில் அரசியல்வாதிக்கும், பச்சைக்கும் மோதல் வெடிக்கிறது. பச்சையை ஆள் வைத்து வெட்டி வீசுகிறான்.
அதில் உயிர் பிழைக்கும் பச்சை அரசியல்வாதியை வீடு புகுந்து வெட்டுகிறான். எதிர்கோஷ்டியில் உள்ள அரசியல் தாதா பச்சைக்கு அடைக்கலம் கொடுத்து பகையாளிகளை போட்டுத் தள்ள பயன்படுத்துகிறான்.
இன்னொருபுறம் கல்லூரி மாணவி தமிழ்ச்செல்வியுடன் காதல் மலர்கிறது. அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால் பச்சையின் நடவடிக்கைகள் அவனுடன் அவளை நெருங்க விடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் முரட்டுத்தனம் காதலை சின்னா பின்னாமாக்குகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் நெஞ்சை உலுக்குகின்றன.
கிராமிய களத்தில் அரிதாரம் இல்லாத கேரக்டர்களை உயிர்ப்போடு நடமாடவிட்டு அழுத்தமான கதையோட்டத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கீரா.
பச்சையாக வரும் வாசகர் கேரக்டரில் வாழ்கிறார். ஜாலியாக வாழவேண்டும் என்ற சித்தார்ந்தத்தில் திரியும் அவர் அரசியல்வாதிகள் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாவது நெஞ்சை உறைய வைக்கிறது.
தமிழ்செல்வி பின்னால் அலைந்து காதல் செய்வது சுவாரஸ்யம். எதிரிகளால் வெட்டி மூட்டையில் கட்டி மரத்தில் தொங்கவிட்டு கிடப்பது உதறல். காதலியை பயமுறுத்த தண்ணீரில் அமுக்குவதும், அவர் பலியானதும் நெஞ்சில் தனது பெயரை பச்சை குத்தி இருப்பது கண்டு அலறி துடிப்பதும் ஜீவன்.
தமிழ்செல்வியாக வரும் தேவதை இரு கெட்டப்பில் கிராமத்து தேவதையாய் ஜொலிக்கிறார். கிளைமாக்சில் பழிதீர்க்கும் படலத்தை நிறைவேற்றும்போது ஆவேசத்தில் நடிப்பின் உச்சம் தொடுகிறார்.
நண்பனாக வரும் வளவன், தம்பியாக வரும் துருவன், அப்பாவாக வரும் முரா அம்மாவாக வரும் சத்தியபாமா கேரக்டர்களும் வலுவாக செதுக்கப்பட்டு உள்ளன.
காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய காதலியிடம் பள்ளியிலும், பஸ் பயணங்களிலும், கூட்டத்தினர் மத்தியில் அத்துமீறும் நாயகனின் நடத்தைகள் வெறுப்பூட்டுகின்றன. கிளைமாக்ஸ் சீட் நுனிக்கு இழுக்கும் திகில்...
அரிபாபுவின் இசை ஒன்ற வைக்கிறது. அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு கிராமிய அழகை அள்ளுகிறது.
Email This
BlogThis!
Share to Facebook