நாயகனான ஜெய்விகாஷ் பாபுவுக்கு சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என லட்சியத்தோடு இருக்கிறார். திறமைக்கும், லட்சியத்திற்கும் மதிப்பளிக்கிற கதாநாயகி மேக்னா நாயர்.
தன்மேல் ஆர்வம் காட்டுகிற கதாநாயகியை ஹீரோ காதலிச்சு பார்க்க நினைக்க, ஹீரோயினுக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் இருக்கிறார். ஹீரோ சோக கீதத்தோடு நில்லாமல் தன் லட்சியத்தில் ஜெயிக்க, ஹீரோயின் என்ன ஆனார்? அவருடைய காதல் என்ன ஆனது? ஹீரோவுடனான காதல் என்ன ஆனது? என்பது முடிவு.
கையில் கிடாரோடு அறிமுகமாகும் போதே ஹீரோ இசையமைப்பாளராக ஆசைப்படுகிறர் என்பது தெரிந்து விடுகிறது. அவ்வளவுதான். அதன்பிறகு ஹீரோயினுக்கு கிடார் கற்றுக் கொடுக்க, அந்த சத்தமே வராத கிடாரை ஒருமுறை தொடுகிறார் அவ்வளவுதான். மீதி நேரம் எல்லாம் திருமலை நாயக்கர் மஹால் தூணை சுற்றி வந்த மாதிரியே ஹீரோயினைச் சுற்றியே திரிகிறார். நடனம் மட்டும் ஹீரோவுக்கு வந்திருக்கிறது.
ஹீரோயின் நன்றாக உயரமாக இருக்கிறார். அவருக்கு பொருத்தமே இல்லாத தாவணியில் படம் முழுவதும் வருவது ஏனோ? மற்றபடி அவருக்கு வேறு வேலை இல்லை.
கதாநாயகன் நண்பர்களாக வரும் முத்துக்காளை, சாம்ஸ் காமெடி செய்திருக்கிறார்கள். காதல் சுகுமார் நம்மை சிரிக்க வைக்க எவ்வளவோ முயல்கிறார். ஹீரோ, ஹீரோயின் வேலை செய்யும் அலுவலகத்தில் பியூனாக வருபவர் மட்டும், கொஞ்ச நேரம் வந்தாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்.
கானா உலகநாதன் எதற்கு வந்தார் என்றே தெரியவில்லை. அவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பதற்காக அவர் முகத்தை காட்ட நினைத்தார்களோ என்னவோ, அதற்கு அவர் பாடிய பாடலிலாவது அவரை பயன்படுத்தியிருக்கலாம்.
செல்வதாசன் இசையில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. ஆனால் பொண்ணுக்கிட்ட மாட்டிக்காதீங்க, கைவீசம்மா கைவீசு, இரண்டு பாடல்கள் மட்டும்தான் நம்மை தாளம் போட வைக்கின்றன.
படத்திற்கு எடிட்டிங் அனில்மல்நாட். ஆனால் அவரா! என்று நம்மால் நம்பவே முடியவில்லை. அந்தளவிற்கு ரொம்ப சொதப்பல்.
திரைக்கதையில்லாமல் படம் எடுத்தால் அது சுவர் இல்லாத வீடு மாதிரிதான். அதேபோல் ஹீரோயினை முதல் முறை பார்த்ததும் கனவு காண்கிறார் ஹீரோ. ஹீரோயின் பெயரில் கவிதை எழுதுகிறார். பார்த்த எடுப்பிலேயே ஹீரோயின் பெயரெல்லாம் நம்ம ஹீரோவுக்கு எப்படித்தான் தெரிகிறதோ?
படத்தில் ஹீரோ காதல் வசப்பட்ட மாதிரியே தெரியவில்லை. ஆனால் அதற்குள் அவர் காதல் தோற்று, அந்த காதலை மறக்க ஒரு குவாட்டர் வேறு. இதற்கடுத்து ராசாத்தி ரோஜாப் பூ என்று பல்லவியை போட்டு பெரிய இசையமைப்பாளராகவும் ஆகிவிடுகிறார் ஹீரோ. முடியலப்பா....
ஹீரோ ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று நண்பர்கள் புலம்புகிறார்கள். அங்கு வரும் ஹீரோயின் தான் ஏன் ஹீரோவை காதலிக்கவில்லை என்று நண்பர்களிடம் காரணத்தை பிளாஷ்பேக்கில் விளக்குகிறார். பிளாஷ் பேக் முடிந்ததும் ஹீரோ ஆஸ்பத்திரியிலும் இல்லை, ஹீரோயின் அவரை பார்க்கவும் இல்லை. திரைக்கதை மட்டும் அது பாட்டுக்கு போகிறது. இது போன்று பல இடங்களில் திரைக்ககதை திக்கு தெரியாமல் போகிறது.
ஹீரோவின் நண்பர்களுக்கும், ஹீரோயின் நண்பிகளுககும் வேறு வேலையே இருக்காதா? நண்பர்கள் டேய் அவளை மடக்கிருடா என்று படம் முழுக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நண்பிகள் யேய் அவன் நல்லவன்டி அவன லவ் பண்ணுடி என்று சதா புலம்புகிறார்கள். மாத்துங்கப்பா...
'காதலிச்சி பார்' - பார்க்க விரும்பவில்லை.