காதல் பிசாசே

width="200"

கதாநாயகி மிதுனாவின் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் மகனாக கதாநாயகன் அரவிந்த்.  கதாநாயகி படிக்கும் அதே காலேஜில் கதாநாயகனும் படிக்கிறார். அவரை படிக்க வைக்கிறார் மிதுனாவின் அப்பாவான சந்தான பாரதி. 
 
நட்பாக இருக்கும் நாயகனும், நாயகியும் நாளடைவில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதலில் ஆழ்ந்து போனதால் நன்றாக படிக்கும் நாயகனுக்கு தேர்வில் அரியர் விழுகிறது. இதனால் பைனல் இயரை முடிப்பதற்காக பம்பாயில் இருக்கும் வேறொரு கல்லூரிக்கு செல்கிறார். 
 
கல்லூரியில் அவர் படிப்பை முடித்தாரா?   விதி அவரை எப்படி மாற்றுகிறது? என்பதே மீதிக் கதை.
 
கதநாயாகனாக அறிமுகமாயிருக்கும் அரவிந்த், அவரே தயாரித்து, இயக்கவும் செய்திருக்கிறார். அதனால் அவர் தன்னுடைய ஆசைகளை எல்லாம் இப்படத்தில் நிறைவேற்றிக் கொண்டார் என்றே சொல்லலாம். அறிமுக பாடல்,  பறந்து, பறந்து சண்டை என்று கல்லூரி மாணவனாக வரும்போது மட்டும் ஓரளவு பொருந்தியிருக்கிறார். மும்பையில் டானாக வருவதெல்லாம் ரொம்ப சொதப்பல்.
 
நாயகி மிதுனா வழக்கம்போல் ஹீரோவை காதலித்தாலும் கூடவே ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். ஆனால் கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டியிருக்கிறார். மற்றபடி பெரிதாக எதையும் செய்ய விடவில்லை. 
 
சந்தானம் இடைவேளை வரை வந்தாலும் கலக்கி விடுகிறார்.  இவர் புரொபஸர் முதல் அனைவரையும் கலாட்டா செய்யும் அளவுக்கு காலேஜ் எதுவும் இருக்காது என்றாலும், அவர் வரும் காட்சிகளில் லாஜிக் மறந்து சிரிக்க முடிகிறது.  அதுவும் தண்ணீர் கிளாஸை சங்கிலி போட்டு கட்டி வைத்திருப்பதற்காக, புரொபஸரை சந்தானம் கலாய்ப்பது கலக்கலோ கலக்கல். கூல் சுரேஷ், சங்கர், கொட்டாச்சி ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
 
பிருந்தன் இசையில் பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்கவில்லை. சைந்தவி குரலில் 'சுவாசமாய்...' பாடலும், கவிதா ஜெயராமன் குரலில் 'இதயமே...' பாடல் மட்டும் கேட்க முடிகிறது.
 
பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவில் பாடல்கள் பின்னணியில் வரும் பாண்டிச்சேரியின் அழகை ரசிக்க முடிகிறது.  மின்னல் முருகன் சண்டைக் காட்சியில் மின்னல் இருந்தாலும், கதாபாத்திரத்தோடு ஒட்டவில்லை. எடிட்டிங், கலை இயக்குனருக்கெல்லாம் பெரிய வேலை ஒன்றும் இல்லை.
 
நாயகியை உருக, உருக காதலித்து, அம்மாவுக்கு அடக்கமான பையனாக இருந்து, லட்சியத்தோடு மும்பை போன ஹீரோ பத்து நிமிடத்தில் டானுக்கெல்லாம் டான் ஆவது ரொம்ப ஓவர்.  பொறுப்பான பையன் இப்படித்தான் இருப்பானா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.
 
நாயகி மிதுனா திறமையான ஐ.பி.எஸ். அதிகாரி என்று பாத்திரத்துக்கு பலத்தை சேர்த்துவிட்டு,  மாபியா உலகத்தில் அவர் நுழைய புத்திசாலித்தனமாக எந்த ஒரு ஐடியாவும் செய்யாமல், தன்னை ஒரு கால் கேர்ள் என்று நுழைவதெல்லாம் சகிக்க முடியவில்லை. தமிழ் சினிமா, பெண்களை ஊறுகாயாகத்தான் பார்க்குமா?
 
சந்தானம் காமெடி ரசிக்க முடிந்தாலும் டபுள் மீனிங் வசனங்கள் தேவையில்லாதது. கிளைமேக்ஸ் எதிர்பாராமல் இருந்தாலும், அதற்கு முந்தைய பலமில்லாத காட்சிகளால் எதிலும் நாம் ஒன்றிட முடியவில்லை.
 
ஒரு நாளைக்கு ஒரு நாட்டில் தங்கும் மிகப்பெரிய டானை மூன்று பெண் போலீஸ் துரத்தி பிடிப்பதுதான் படத்தின் மிகப்பெரிய காமெடி.
 
இயக்குனர் ஒன்று காதல் படம் எடுத்திருக்க வேண்டும். இல்லை ஆக்ஷன் படம் எடுத்திருக்க வேண்டும். இரண்டையும் ஒரே படத்தில் எடுக்க நினைத்ததுதான் படத்தின் பலவீனம்.
 
மொத்தத்தில் 'காதல் பிசாசு'  யாரையும் பிடிக்கவில்லை.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India