ஸ்ரீ ராம ராஜ்ஜியம்

width="200"

பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடியாக நடித்து தெலுங்கில் வந்த படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ளனர். ராமர், சீதை பற்றிய புராண கதை....
 
ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டு ராமன் அயோத்தி திரும்புவது போல் கதை துவங்குகிறது. அரண்மனையில் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மன்னன் ஆனதும் நீதி பிறழாது மக்களுக்கு பணி செய்யப்போவதாக ராமன் சூளுரைக்கிறான். மீண்டும் கணவருடன் சேர்ந்த சீதை, சந்தோஷத்தில் மிதக்கிறாள்.
  
அப்போது ஒற்றன் வந்து ஒர் அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறான். ராவணனின் மாளிகையில் இருந்த சீதையின் ஒழுக்கத்தில் மக்கள் ஐயம் எழுப்புவதாகவும், மனைவியை அரண்மனைக்கு அழைத்து வந்ததை ஏளனம் செய்கின்றனர் என்றும் சொல்கிறான். இதை கேட்டு ராமன் நொறுங்குகிறான்.
 
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ராமன், கர்ப்பிணியாக இருக்கும் சீதையை தனது தம்பி லட்சுமணன் மூலம் காட்டில் விட்டு வரச்செய்கிறான். வால்மிமீகி முனிவரின் பாதுகாப்பில் காட்டிலேயே தங்கி விடுகிறாள் சீதை. அவளுக்கு லவன், குசன் என இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர். வளரத் துவங்கியதும் அவர்கள் காட்டிலேயே போர்க்கலையை கற்று தேர்கின்றனர்.
 
ஒரு கட்டத்தில் ராமர் தனது மனைவியை காட்டில் விட்டவர் என்ற தகவல் அவர்களுக்கு தெரியவர, ராமனின் மேல் வெறுப்பாகிறார்கள். அயோத்தியில் இருந்து காட்டுக்குள் வரும் பட்டத்து குதிரையைப் பிடித்து மரத்தில் கட்டிப் போடுகின்றனர். மீட்க வரும் வீரர்களுடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். அவர்கள் வீசும் அம்பில் லட்சுமணனும், படைவீரர்களும் மயக்கமாகி வீழ்கிறார்கள். இதனால் ராமனே அவர்களுடன் நேரில் போரிட வருகிறான்.
 
அப்போது தந்தை மகன்கள் ரகசியம் உடைபடுவதும் சீதை என்ன முடிவு எடுத்தாள் என்பதும் கிளைமாக்ஸ்...
 
ராமனாக பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் கேரக்டரில் ஒன்றுகின்றனர். குடும்பத்தைவிட நாட்டு மக்களே முக்கியம் என ஆட்சி புரியும் பாங்கிலும் மனைவி மீதான அவப்பெயர் கண்டு கலங்குவதிலும் பாலகிருஷ்ணா அபாரம்.
 
சீதை வேடத்தில் நயன்தாரா ஜொலிக்கிறார். கணவனின் உத்தரவால் காட்டில் தனித்து விடப்பட்டு கலங்கும்போதும் கணவனின் நெருக்கடிகளைப் புரிந்து அவன் மேல் வற்றாத அன்பை பொழிந்தும் உணர்ச்சி பிழம்பாய் உருக வைக்கிறார். காவி சேலை, ருத்ராட்சை மாலை கெட்டப்பில் கருணை வடிவமாய் பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் தந்தையுடன் மோதும் மகன்களை கடிந்து பூமாதேவியிடம் அடைக்கலமாகி அனுதாபம் அள்ளுகிறார்.
 
முதல் பகுதி கதை மெதுவாகச் செல்கிறது. அதையும் மீறி பிரமாண்ட அரண்மனை அரங்குகளும் போர் வீரர்கள், அரசர் காலத்து காஸ்ட்யூம்களும் அயோத்தி தேசத்தில் சுற்றி வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.
 
ராமனின் தாயாக வரும் கே.ஆர்.விஜயா, வால்மீகி முனிவராக வரும் நாகேஸ்வரராவ், பூமாதேவியாக வரும் ரோஜா கேரக்டர்கள் படத்திற்கு வலுசேர்க்கின்றனர். லவன், குசனாக வரும் சிறுவர்கள் தனுஷ், கவுரவ் கவர்கிறார்கள்.
 
இளையராஜா இசையில் பாடல்கள் நெஞ்சில் பதிகின்றன. பி.ஆர்.கே.ராஜு ஒளிப்பதிவில் மன்னர் கால பிரமாண்டங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கின்றன.
 
மொத்தத்தில் ஸ்ரீராம ராஜ்ஜியம் ராமரின் பக்தர்களுக்கு வரப்பிரசாதம்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India