நான்

width="200"

அன்பு கிடைக்காமல் போவதே தவறுக்கான மூல காரணம். இதை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்தான் 'நான்'. கதாநாயகன் கார்த்திக் தனது அம்மா இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வதை நேரில் பார்த்து விடுகிறான். இதை அறியும் அவனது அப்பா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் விரக்தியடைந்த கார்த்திக் அவனது அம்மாவையும், கள்ளக்காதலனையும் வீட்டோடு வைத்து எரித்துக் கொல்கிறான்.

அதன்பிறகு ஜெயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில், கார்த்திக் வரும் பஸ் விபத்தில் சிக்கிக் கொள்கிறது. அந்த விபத்தில் பலியான மருத்துவ கல்லூரி மாணவனின் சான்றிதழை பார்க்கிறான் கார்த்திக். அதை எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையை புதிய பாதையில் செலுத்த அவனுக்குள் ஒரு உத்தி தோன்றுகிறது. இதற்கு தனது தனிப்பட்ட திறமையான மற்றொருவரின் கையெழுத்தை அச்சு அசலாக அப்படியே போடுவதை பயன்படுத்தி முகமது சலீம் என்ற பெயருடன் மருத்துவக் கல்லூரியில் படிக்க சேர்கிறான்.

அங்கு அசோக் என்ற பணக்கார நண்பனின் நட்பு கிடைக்கிறது. அவர்களது நட்புக்கு அசோக்கின் காதலி மூலம் பிரச்சனை வர, தன் நண்பனே தன்னை காட்டிக் கொடுத்துவிட்டான் என்ற ஆத்திரத்தில் கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான் அசோக்.

அந்த நேரத்தில் முஸ்லீமாக கார்த்திக் செய்திருக்கும் ஆள்மாறாட்டத்தின் பின்புலத்தை அறியும் அசோக் கார்த்திக்கை மிரட்ட இருவருக்கிடையேயான மோதலில் அசோக் இறந்து விடுகிறான். இந்த கொலையை மறைப்பதற்காக ஒவ்வொரு முறையும் தவறு செய்ய, தான் வாழும் இன்னொருவரின் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள அவன் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சி.

கார்த்திக்காக இருந்து முகமது சலீமாக மாறும் கதாபாத்திரத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. முதல்முறையாக கதாநாயகன், தயாரிப்பு,  என களமிறங்கியிருக்கிறார். ஹீரோயிசம் இல்லாமல் படம் முழுக்க யதார்த்தமான தவறு செய்த குற்ற உணர்வோடும், தவறை மறைக்க அவர் எடுத்துக் கொள்கிற முயற்சியில் இறுதியாக தன்னைத்தானே தாக்கி சண்டையிடும் போதும், இசையில் பெயரெடுத்ததுபோலவே நடிப்பிலும் பெயரெடுத்திருக்கிறார்.

படத்தில் இன்னொரு ஹீரோ அசோக்காக வரும் 'ஆனந்த தாண்டவம்' சித்தார்த். படத்தின் முதல் பாதியில் வந்தாலும் மேல்தட்டு வர்க்கத்துக்குடைய பேச்சும், லேசான சிரிப்போடு இருக்கும் அவரோடு முகமும் பொருத்தமான தேர்வு. அழகாக இருக்கிறார்.

ஹீரோயினாக ரூபா மஞ்சரி. பின்பாதியில் நடிப்பதற்குண்டான வாய்ப்பை சரியாக செய்திருக்கிறார். சித்தார்த் என்ன ஆனான் என்று தெரியாமல் தவிப்பதிலும், விஜய் ஆண்டனியின் மேல் சந்தேகம் வந்து கோபப்படும் நேரத்திலும் நல்ல நடிப்பு. இன்னொரு நாயகியாக வரும் அனுயா அவ்வப்போது வந்து போகிறார்.

படத்தோட மற்றொரு ஹீரோ விஜய் ஆண்டனியின் இசைதான். பின்னணி இசையில் கடின உழைப்பை கொடுத்து, பின்பாதி காட்சிகளில் நம்மை பரபரப்பாக்கியிருக்கிறார். பாடல்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். படத்தின் முதல் பாதி வரை கதை எந்த ரூட்டில் போகப் போகிறது என்பது தெரியாமல் கொண்டு சென்று, பின்பாதி முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் அடுத்த என்ன என்று நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். தெளிவான திரைக்கதையும், அவரது ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுக்கிறது.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதுதான் படத்தில் கொஞ்சம் மைனஸ். ஒன்றிரண்டு இடத்தில் லாஜிக் மீறல்களையும் கவனித்திருக்கலாம்.

மற்றபடி 'நான்' நம்மோடு ஒன்றியிருக்கிறான்.



Envoyé de mon iPhone

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India